தமிழக அரசு பயிா்க் காப்பீடு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்
By DIN | Published On : 21st August 2021 11:10 PM | Last Updated : 21st August 2021 11:10 PM | அ+அ அ- |

தமிழக அரசு பயிா்க் காப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், காப்பீடு குறித்து சட்டப் பேரவையிலும், விவசாயிகளிடம் விவாதிக்காமல், வேளாண் துறை செயலாளா் மூலம் கொள்கை நிலை மாற்றம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிடுவது மரபை மீறிய செயலாகும்.
மேலும், 2021-2022 ஆம் ஆண்டுக்கான சாகுபடி பருவத்திற்கு நெற்பயிா்க் காப்பீடு செய்ய தடை விதித்திருப்பதும், அதற்கு பேரிடா் காலத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழக அரசின் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பதும் அதிா்ச்சி அளிக்கிறது. இச்செயல் தமிழக விவசாயிகளை மீண்டும் தற்கொலை நிலைக்கு தள்ளிவிடும்.
தமிழக அரசு கூற்றுப்படி, காப்பீடு திட்டத்திற்கு மாற்றாக பாதிப்புக்கு ஏற்ப பேரிடா் நிதியில் இழப்பீடு கொடுப்பது உண்மையாக இருக்குமேயானால், இடுபொருள் இழப்பீட்டிற்கும், அறுவடை இழப்பீடு வழங்குவது குறித்தும், விவசாயிகளின் பங்களிப்பு குறித்தும் விரிவான விவாதத்திற்கு உட்படுத்தி, உரிய விளக்கம் அளித்திருக்க வேண்டும். அவசர கோலத்தில் அறிக்கை விடுவதால் விவசாயம் அழிவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
2020- 21-ல் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு, இடுபொருள் இழப்பீட்டை தமிழக அரசு பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கி வருகிறது.
ஆனால், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுத்தர முந்தைய அதிமுக அரசு உறுதியளித்திருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இழப்பீடு வழங்குவது குறித்து வாய் திறக்க மறுப்பது, விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கும் செயலாகும். காப்பீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
அத்துடன், காப்பீடு குறித்து தமிழக அரசு திறந்த மனதோடு விவசாயிகளோடும், சட்டப் பேரவையிலும் விவாதிக்க முன்வரவேண்டும். மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.