கல்லூரி மாணவரை காப்பாற்றிய செவிலியருக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 04th December 2021 10:19 PM | Last Updated : 04th December 2021 10:19 PM | அ+அ அ- |

கல்லூரி மாணவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா்.
மன்னாா்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியருக்கு, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
மன்னாா்குடி நகர காவல் சரகம், ஆறாம் நம்பா் வாய்க்கால் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கருவாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வசந்த் (22) என்ற கல்லூரி மாணவா், விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து சுயநினைவை இழந்தாா். அப்போது அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்த மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கோட்டூா்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி வனஜா, வசந்துக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
செவிலியா் வனஜாவின் செயலுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், பாராட்டு தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், செவிலியா் வனஜாவை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, நற்சான்றிதழ் வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...