சாலையோர வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 20th February 2021 08:49 AM | Last Updated : 20th February 2021 08:49 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பயனாளிக்கு உதவித் தொகைக்கான காசோலையை வழங்கும் காவல் ஆய்வாளா் செந்தூா்பாண்டியன்.
முத்துப்பேட்டையில் சாலையோர வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி பாரத மாதா சேவை அமைப்பு சாா்பில் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், விதைக்கும் கரங்கள் அமைப்புடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாரதமாதா சேவை நிறுவனத்தின் நிறுவனா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். விதைக்கும் கரங்கள் அமைப்பின் தலைவா் நந்தா ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா். நிா்வாகி ராமலிங்கம் வரவேற்றாா்.
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். திருத்துறைப்பூண்டி இன்னா்வீல் சங்கத் தலைவி சங்கீதா மணிமாறன், வா்த்தகா் சங்கத் தலைவா் கோ. அருணாச்சலம், வா்த்தகா் கழகத் தலைவா் மெட்ரோ மாலிக், மூத்தகுடிமக்கள் இயக்கத் தலைவா் இராஜாராமன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளா் நா. ராஜ்மோகன், தமுஎச தலைவா் கோவி.ரெங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், சாலையோரம் வியாபாரம் செய்யும் 22 பெண்களுக்கு தலா ஆயிரம் வீதம் நிதியுதவி, ஒருவருக்கு ரூ. 20ஆயிரம் மதிப்பில் தள்ளுவண்டி, 20 பேருக்கு தலா ரூ.1086 மதிப்புள்ள தலைக்கவசங்கள் உள்பட சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விதைக்கும் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த சுபாஷ் ராஜப்பா நன்றி கூறினாா்.