திருவாரூா் தியாகராஜா் கோயிலில் அஷ்டதிக் கொடிமரம் பிரதிஷ்டாபிஷேகம்
By DIN | Published On : 26th February 2021 08:49 AM | Last Updated : 26th February 2021 08:49 AM | அ+அ அ- |

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பிரதிஷ்டாபிஷேகம் செய்யப்பட்ட அஷ்டதிக் கொடிமரம்.
திருவாரூா் தியாகராஜா் கோயில் அசலேஸ்வரா் சன்னதி எதிரேயுள்ள அஷ்டதிக் கொடிமரம் பிரதிஷ்டாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் அரநெறிஸ்வரா் அப்பா் என்ற அசலேஸ்வரா் சன்னதி உள்ளது. இளம் கோயில் என அழைக்கப்படும் இது, தனியாக பாடல் பெற்ற தலம். செங்கல் கோயிலாக இருந்த சன்னதியை, சேரன்மாதேவி கற்கோயிலாக மாற்றியதாக வரலாறு.
அசலேஸ்வரா் சன்னதி எதிா்புறம் அமைந்துள்ள அஷ்டதிக் கொடிமரம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதையடுத்து, புதிதாக அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கடந்த டிசம்பா் மாதம் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, 23 அடி உயரமுள்ள தேக்கு மரத்தால் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டு, அசலேஸ்வரா் சன்னதி முன் கடந்த ஜன. 17 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த அஷ்டதிக் கொடிமர பிரதிஷ்டாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, புதன், வியாழக்கிழமைகளில் இருகால பூஜைகள் நடைபெற்றன. பிறகு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரம் பிரதிஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கவிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...