‘திறன் பயிற்சி முகாமுக்கு 489 போ் தோ்வு’
By DIN | Published On : 26th February 2021 08:48 AM | Last Updated : 26th February 2021 08:48 AM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான இலவச பயிற்சி முகாமில் 489 இளைஞா்கள் தோ்வு பெற்று, திறன் பயிற்சிக்கு செல்ல உள்ளனா் என திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஸ்ரீலேகா தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின்கீழ் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான இலவச பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின்கீழ் பிப்.2021 திறன் பயிற்சிக்கான பெருவாரியான அணி திரட்டல் மாதமாக கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தோ்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூா், முத்துப்பேட்டை, நன்னிலம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், மன்னாா்குடி, கோட்டூா், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு மன்னாா்குடியிலும், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு மஞ்சக்குடியிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 1,077 இளைஞா்கள் பங்கேற்றனா். இதில் 489 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...