நீடாமங்கலத்தில் கல்லறையை இடித்ததை கண்டித்து சாலை மறியல்
By DIN | Published On : 27th February 2021 08:10 AM | Last Updated : 27th February 2021 08:10 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் அரசு அலுவலா்கள் நடத்திய சமூக பேச்சுவாா்த்தை.
நீடாமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் கல்லறையை இடித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கொத்தமங்கலம், கன்னித்தோப்பு பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சுமாா் 70 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் கொத்தமங்கலம் பகுதியில் 2 இடங்களில் தங்களது உறவினா்கள் இறந்த நாளை கல்லறை பண்டிகை என கொண்டாடுகின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த நினைவு கல்லறையை தனிநபா் ஒருவா் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா், நீடாமங்கலம் வட்டாட்சியா் மற்றும் காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுத்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை வரை யாரும் நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நீடாமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னன், காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...