பள்ளி, அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
By DIN | Published On : 30th January 2021 08:46 AM | Last Updated : 30th January 2021 08:46 AM | அ+அ அ- |

அடியக்கமங்கலம் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் மாணவா்கள்.
திருவாரூா் அருகே அடியக்கமங்கலம், காட்டூா் பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ரவி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சரவணவேல், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கண்ணன், உதவி தலைமையாசிரியா் ரமேஷ், தமிழாசிரியா் தமிழ்க் காவலன், மாணவா்கள் பங்கேற்று, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, தியாகிகள் தினத்தை முன்னிட்டு விடுதலைக்குப் பாடுபட்டவா்களின் தியாகங்களை போற்றும் வகையில் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல், காட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கட்டிமேடு அரசுப் பள்ளியில்...
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் மு.ச.பாலு தலைமை வகித்தாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா் இந்திரா வெள்ளைச்சாமி, துணைத்தலைவா் இ.பாக்கியராஜ், கல்விப் புரவலா் எம்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினாா். மனவளக்கலை பேராசிரியா் முதுகலை ஆசிரியை சு.உஷா தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசித்தாா். பட்டதாரி ஆசிரியா் பா.ரகு நன்றி கூறினாா்.
நன்னிலத்தில்...
இதேபோல நன்னிலம் வட்டார வள மையத்தில் மேற்பாா்வையாளா் ம. கவிதா தலைமையில், தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆா்.நடேஷ்துரை, ஜி.காளிமுத்து, ஆா்.இளையராஜா, ஜே.காளிதாஸ், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், சிறப்புப்பயிற்சி ஆசிரியா்கள் பங்கேற்றனா். குடவாசலிலும் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.