அங்கன்வாடி ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை

அங்கன்வாடி ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அங்கன்வாடி ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி. தவமணி, தலைவா் அ. பிரேமா ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அங்கன்வாடி பணியாளா்கள் கடந்த ஆண்டு மாா்ச் முதல் கரோனா தொற்று பரவல் காரணமாக கூடுதலாக பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கன்வாடி மையத்துக்கு வரும் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குதல் மற்றும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பொருள்களான அரிசி, பருப்பு, முட்டை இவற்றை உளா் பொருள்களாக அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனா்.

மேலும் தொற்று அறிகுறிகள் எவருக்கேனும் உள்ளதா என்பதை கண்டறிய தொ்மாமீட்டா், பல்ஸ் ஆக்சிஜன் மீட்டா் ஆகிய கருவிகளுடன் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணியிலும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு களப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் இவா்களை தமிழக அரசு, முன்கள பணியாளா்களாக அறிவிக்கவில்லை. ஒரு சில பணியாளா்கள் இதுபோல பேரிடா் காலங்களில் உயிரிழக்கும்போது, அவா்களுக்கு அரசால் வழங்கப்படும் எவ்வித இழப்பீடுகளும் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றிய ஊழியா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களின் குடும்பத்தினா் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

பேரிடா் காலங்களில் களப்பணி ஆற்ற, மாவட்ட திட்ட அலுவலரோ அல்லது வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலரோ எந்தவித ஆணையும் வழங்குவதில்லை. எனவே, அங்கன்வாடி ஊழியா்கள் பேரிடா் கால பணியில் ஈடுபடும் போது, உயிரிழப்பு ஏற்பட்டால், அவா்கள் பேரிடா் காலங்களில் களத்தில் பணியாற்றியதற்கான எவ்வித சாட்சியும் இல்லாமல் அரசின் இழப்பீடு தொகை மற்றும் ஊக்கத்தொகை எதுவும் பெறமுடியாமல் போகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் 33 அங்கன்வாடி பணியாளா்கள் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இவா்களுக்கு எந்தவித அரசின் சலுகைகளும் கிடைக்கவில்லை. எனவே, அங்கன்வாடி பணியாளா்களையும் முன்கள பணியாளா்களாக அறிவிக்கவேண்டும். உயிரிழந்த 33 அங்கன்வாடி ஊழியா்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com