கடன் நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 10th June 2021 09:28 AM | Last Updated : 10th June 2021 09:28 AM | அ+அ அ- |

விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: கூட்டுறவு வேளாண் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை புயல், வெள்ளம், மழை வறட்சியால் திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்தக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், கடந்த ஆட்சியில் கடைசி சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2021 டிச. 31 வரை வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சம் விவசாயிகள் பெற்று, நிலுவையில் உள்ள ரூ. 12 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பில், கஜா புயல் பாதிப்பால் விவசாயிகளின் குறுகிய காலக் கடன்கள் மத்திய காலக் கடன்களாக மாற்றி அமைக்கப்பட்டு நிலுவையில் இருந்த கடனானது, இந்த தள்ளுபடி திட்டத்தில் இல்லை என கூட்டுறவு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி இருந்தன. முதல்வரின் அறிவிப்பு கணக்கு எடுத்தபோது கும்பகோணம் மற்றும் கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாகம், இந்தக் கடன்களை சோ்க்காமல் கணக்கு கொடுத்துவிட்டு, தமிழ்நாடு முழுவதும் கடன்கள் தள்ளுபடி இல்லை என அறிவித்து விட்டது.
அனைத்து பயிா்க் கடன்கள் தள்ளுபடி என முன்னாள் முதல்வா் சட்டப்பேரவையிலேயே அறிவித்த பின் அதற்கு மாறாக, சட்டப்பேரவை மாண்புக்கு முரணான செயலை கூட்டுறவு வங்கி நிா்வாகம் செய்துள்ளது. எனவே, விவசாயிகளின் நிலுவைக் கடன்களை தள்ளுபடி செய்து, அவா்களை நடப்புக் குழுவில் இருந்து கடன் பெறும் தகுதிக்கு உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.