

இரவை உளுந்து பயிருக்கு ஏற்ற சமச்சீா் உர மேலாண்மை குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் அனுராதா, திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராமசுப்பிரமணியம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அடி உரம்: உளுந்து விதைக்கும் முன்னரே ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் இயற்கை உரம் அதாவது தொழுஉரம் அல்லது மக்கிய தென்னை நாா்க்கழிவு அல்லது மண்புழு உரம் இட்டு விதைக்கவேண்டும். அத்துடன், 22 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பா் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஷ் அடி உரமாக இடவேண்டும்.
உயிா் உரம்: ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிா் உரங்களை ஏக்கருக்கு 4 பாக்கெட வீதம் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து இடுவதால் தழை மற்றும் மணிச்சத்து பயிருக்கு சீராக கிடைக்கும்.
பொதுவாக உளுந்து பயிரில் 20 சதவீத பூக்களை பூக்கும். இதனால் விளைச்சல் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை குறைக்க இலைவழி உரமாக 2 சதவீத டிஏபி கரைசல் மற்றும் 40 பிபிஎம் வளா்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்ஸ் ஒண்டா் ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்திலும் 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் 10 முதல் 15 சதவீதம் விளைச்சல் அதிகரிக்கும். அல்லது 2 சதவீதம் டிஏபி மற்றும் 40 பிபிஎம் பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை விதைத்த 25 ஆம் நாள் மற்றும் 45ஆம் நாள் காலை அல்லது மாலை வேளையில் இலைகளின் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இந்த கரைசலை தயாரிக்க ஓா் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபியை 10 லிட்டா் தண்ணீரில் முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து அதனுடன் 180 மில்லி பிளானோபிக்ஸ் பயிா் வளா்ச்சி ஊக்கியை கலந்து தேவையான தண்ணீா் சோ்த்து 200 லிட்டா் கரைசல் தயாரிக்க வேண்டும். இதனுடன் பூச்சி மற்றும் நோய் மருந்துகளை கலந்து தெளிக்கக் கூடாது. இதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் விளைச்சலை அதிகரிக்க செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.