ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 2.08 லட்சம் திருடிய வங்கி ஒப்பந்த ஊழியா் கைது
By DIN | Published On : 24th June 2021 09:10 AM | Last Updated : 24th June 2021 09:10 AM | அ+அ அ- |

திருவாரூரில் முதன்மைக் கல்வி அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி.
திருவாரூரில் ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து ரூ.2.08 லட்சத்தை திருடிச் சென்றதாக வங்கி ஊழியா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலகக் கட்டட வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், அதன் ஏ.டி.எம். மையமும் உள்ளன. இந்நிலையில், வங்கி ஊழியா்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைக்கச் சென்றபோது, அதில் ரூ.2.08 லட்சம் குறைந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கிக் காசாளா் சேவியா் அளித்த புகாரின்பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனா். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தை திறந்து அதிலிருந்து பணத்தை ஒருவா் எடுத்துச் செல்வது தெரிந்தது.
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் கொடிக்கால்பாளையம் அருகே உள்ள சாமந்தான்பாளையத்தைச் சோ்ந்த இளையராஜா (27) என்பதும், அதே வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக ஓராண்டாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவா் மேலாளா் அறையிலிருந்து ஏ.டி.எம். இயந்திர சாவியை எடுத்து, அதன் ரகசிய எண்ணை (பாஸ்வோ்டு) பயன்படுத்தி, ஜூன் 12-ஆம் தேதி ரூ.2.08 லட்சம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து தாலுகா போலீஸாா் அவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனா். அவரிடமிருந்து ரூ. 1.90 லட்சம் மீட்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...