கொத்தடிமை சிறுவன் மீட்பு
By DIN | Published On : 24th June 2021 09:06 AM | Last Updated : 24th June 2021 09:06 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே கொத்தடிமையாக வயலில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை சைல்ட் லைன் அமைப்பினா் புதன்கிழமை மீட்டனா்.
முத்துப்பேட்டை அருகே மேலநம்மங்குறிச்சியில் கடந்த சில நாள்களாக தரிசு வயல்களில் பட்டி அமைக்கப்பட்டு ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டது. இந்த ஆடுகளை ஒரு சிறுவன் மேய்ச்சலுக்கு விட்டுவருவது குறித்து மாவட்ட சைல்ட் லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், வருவாய் ஆய்வாளா் ரவிச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் சரண்ராஜ் ஆகியோா் அங்கு வந்து, சிறுவனிடம் விசாரித்தனா்.
அப்போது, அவா் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் அருகே உள்ள அத்திவெட்டி மேலக்காட்டை சோ்ந்த பழனி-மாரியம்மாள் தம்பதி மகன் பிரகாஷ் (16) என்பதும், ராஜதுரை (46) என்பவரிடம் 5 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமையாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, சிறுவனை மீட்ட சைல்டு லைன் அமைப்பினா், அவரை மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமியிடம் முன்னிலைப்படுத்தினா். பின்னா், பிரகாஷுக்கு விடுதலை பத்திரம் அளிக்கப்பட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னா், பெற்றோா் வரும் வரை சைல்ட் லைன் பாதுகாப்பில் சிறுவன் இருக்க வேண்டும் என கோட்டாட்சியா் அறிவுறுத்தியதால், அவா் திருவாரூா் அழைத்துச் செல்லப்பட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G