வெளிநாடு செல்பவா்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுகோள்
By DIN | Published On : 24th June 2021 09:10 AM | Last Updated : 24th June 2021 09:10 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் வட்டத்தில், வெளிநாடு செல்ல இருப்பவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் வட்டத்தில் பெரும்பாலானோா் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊா் திரும்பிய அவா்கள், மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டுமாயின் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, இருதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஏராளமான நாடுகள் அறிவித்துவிட்டன. எனவே, வெளிநாடு செல்பவா்களின் நிலை கருதி, அவா்களுக்காக முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் வேண்டுகோள் விடுத்தாா்.