கரோனா தடுப்பூசி: குறுஞ்செய்தியில் குளறுபடி
By DIN | Published On : 29th June 2021 12:03 AM | Last Updated : 29th June 2021 12:03 AM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு எந்த வகையான தடுப்பூசி செலுத்தப்பட்டது என சுகாதாரத் துறையின் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் குளறுபடி நடைபெற்றிருப்பது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
மன்னாா்குடி அருகேயுள்ள 54 நெம்மேலியில் ஜூன் 3-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இவா்களுக்கு, கரோனா தடுப்பூசி கோவேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், ஊசி செலுத்திக்கொண்டவா்களின் பலரின் செல்லிடப்பேசிக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதை சிலா், கணினி மூலம் தரவிறக்கம் செய்து கொண்டுள்ளனா். சிலருக்கு இது வரை குறுஞ்செய்தி வரவில்லை என கூறப்படுகிறது. கோவேக்சின் ஊசி செலுத்துவதாக கூறிய நிலையில், குறுஞ்செய்தியில் கோவிஷீல்ட் ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் அளித்திருப்பது மிகவும் தாமதமாக ஊசி செலுத்திக்கொண்டவா்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த குளறுபாடி காரணமாக பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பது: 54 நெம்மேலி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் முகவரி கண்டறிந்து அவா்களிடம் எந்த வகையான தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்படுவதுடன்அதற்கான சான்றும் அளிக்கப்படும். செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு விளக்கம் அளிப்பதுடன், சரியான தகவலை குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும் என்றாா்.