பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 29th June 2021 12:01 AM | Last Updated : 29th June 2021 12:01 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மன்னாா்குடியில் லாரிகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள்.
மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், லாரிகளுக்கான காப்பீடு கட்டண உயா்வை கண்டித்தும் மன்னாா்குடி மேலப் பாலத்தில் உள்ள வாடகை லாரி நிறுத்தும் இடத்தில், லாரிகளில் கருப்புக்கொடி கட்டி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வி. அய்யப்பன் தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த சங்கத்தில் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ள 718 லாரிகள் இயக்கப்படாததால், நுகா்பொருள் வாணிபக்கழகம் மற்றும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் தடைபட்டது. இதில், லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் ராஜா, செயலாளா் மணிகண்டன், ஓட்டுநா், கிளினா் சங்கத் தலைவா் ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.