சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி
By DIN | Published On : 12th March 2021 06:28 AM | Last Updated : 12th March 2021 06:28 AM | அ+அ அ- |

திருவாரூா்: சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாக பணிபுரிய முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாக, முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த 65 வயதுக்குள்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரா்களும், இதில் ஈடுபட விருப்பக் கடிதம் வழங்க வேண்டும்.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரியும் முன்னாள் படை வீரா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டட வளாகத்தில், அறை எண் 201-204 இல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வாரத்தின் அனைத்து வேலை நாள்களிலும் நேரில் அணுகி எழுத்துமூலமான விருப்பக் கடிதத்தை அளிக்கலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04366 - 290080 மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.