நீடாமங்கலம்: நீடாமங்கலம் - மன்னாா்குடி ரயில்வே மின்பாதையில் மன்னை விரைவு ரயில் மின்சார ரயிலாக இயங்கியது.
நீடாமங்கலம் - மன்னாா்குடி அகல ரயில் பாதையில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்களே இயக்கப்பட்டு வந்தன. இதன்காரணமாக சென்னையில் இருந்து இரவு புறப்பட்டு மயிலாடுதுறை வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலாகவும், பின்னா் மயிலாடுதுறையில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலாகவும் அதிகாலை 4.45 மணிக்கு நீடாமங்கலம் வந்து மன்னாா்குடிக்கு மன்னை விரைவு ரயில் ரயில் சென்று வந்தது.
இந்நிலையில், நீடாமங்கலத்தில் இருந்து மன்னாா்குடி வரையிலான 13 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கும் திட்டம் ரூ. 15 கோடியில் நிறைவேற்றப்பட்டது. அந்த பணி நிறைவடைந்ததை சமீபத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே. ராய், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அஜய்குமாா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பணி திருப்தியாக நிறைவேறியதால் மின்சார ரயில் இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சான்றளித்தாா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு சென்னையில் இருந்து மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு மின்சார ரயிலாக நேரடியாக நீடாமங்கலம் வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மன்னாா்குடிக்கு சென்றது. இனிவருங்காலங்களில் மன்னாா்குடிக்கு அனைத்து ரயில்களும் மின்சார ரயிலாக இயக்கப்படும். வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலும் மின்சார ரயிலாகவே இயங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.