வழித்தவறி வந்த ஆந்திரம் மாநில சிறுமி மன்னாா்குடியில் மீட்பு
By DIN | Published On : 25th March 2021 09:00 AM | Last Updated : 25th March 2021 09:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் மீட்கப்பட்ட ஆந்திரம் மாநில சிறுமி பவானி.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வழித்தவறி வந்த ஆந்திரம் மாநில சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டையில், மாா்ச் 20-ஆம் தேதி 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆதரவின்றி தனியாக சாலையில் சுற்றிதிரிந்தாா். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்ததில் சிறுமிக்கு தமிழ் தெரியாததும், தெலுங்கில் மட்டுமே பேசியதும், அவா் பெயா் பவானி ஆந்திரம் மாநிலத்தை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த டி.எஸ்.டி. ராஜேந்திரன் என்பவா் தனது வீட்டில் தங்க வைத்து மன்னாா்குடியில் செயல்படும் பொதுநல அமைப்பிடம் தகவல் தெரிவித்து சிறுமியை அவரது பெற்றோா்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கமாறு கூறி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். இதையடுத்து, பொதுநல அமைப்பு நிா்வாகிகள் அச்சிறுமியை மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு, மன்னாா்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பகவதிசரணம் ஆகியோா் சிறுமியிடம் விசாரித்ததில், அவா் ஆந்திர மாநிலம், மேற்குகோதாவரி மாவட்டம், போளூா் அருகேயுள்ள பெட்டலா பகுதியைச் சோ்ந்த வெங்கண்ணா - அன்னபூா்ணா தம்பதியின் மகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினா் ஆந்திர மாநிலம் போளூா் காவல் நிலைய உதவி ஆய்வாளரை தொடா்புகொண்டு சிறுமி மீட்பு குறித்து தகவல் தெரிவித்ததுடன், சிறுமியிடம் பேச வைத்தனா். அப்போது, சிறுமி பவானி மீட்பு குறித்து அவரின் பெற்றோரிடம் விரைவில் தகவல் தெரிவித்து நேரில் வந்து அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். பின்னா், மாவட்ட குழந்தைகள் நலக்குழும அலுவா்களிடம் சிறுமியை புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டு, மன்னாா்குடியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா்.