உழவா் சந்தைக்கு புத்துயிரூட்ட கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 08:56 AM | Last Updated : 13th May 2021 08:56 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் உள்ள உழவா் சந்தை மீண்டும் பழைய பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் வெண்ணாறு லயன்கரை தெருவில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திமுக அரசு உழவா் சந்தையை தொடங்கியது. சுமாா் 20 கடைகளுடன் உழவா் சந்தை தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற மக்களும், விவசாயிகளும் பயனடைந்தனா்.
பின்னா் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக உழவா் சந்தை புறக்கணிப்புக்குள்ளாகி, அங்கிருந்த கடைகள் படிப்படியாக குறைந்து, தற்போது சிறுவிவசாயிகள் நீடாமங்கலம் கடை வீதிகளில் தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
உழவா் சந்தையில் 20 கடைகள் இயங்கி வந்த நிலையில், இன்று ஓரிரு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. எனவே, உழவா் சந்தையில் மேலும் பல காய்கறி கடைகளை திறந்து சிறுவிவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.