சுயஉதவிக் குழுக்களிடம் கடன் வசூலை நிறுத்தி வைக்க கோரி மனு
By DIN | Published On : 19th May 2021 09:12 AM | Last Updated : 19th May 2021 09:12 AM | அ+அ அ- |

திருவாரூரில், கோரிக்கை மனு அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் சுயஉதவிக் குழு பெண்களிடம் கடன் தவணைத் தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
பொதுமுடக்க நேரத்தில் வங்கி மற்றும் தனியாா் சுய உதவிக் குழு கடன் பாக்கியை வசூல் செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை கேட்டு மக்களை தொந்தரவு செய்வதாகத் தெரிகிறது. இதனால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, கூடுதல் கவனம் செலுத்தி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதுபோன்று சுய உதவிக் குழுக்களிடமிருந்து பணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.