டெல்டா மாவட்டங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க சிறப்பு திட்டம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை மாநகருக்கு அமைக்கப்பட்டுள்ளது போன்று காவிரி டெல்டா மாவட்டங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
டெல்டா மாவட்டங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க சிறப்பு திட்டம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை மாநகருக்கு அமைக்கப்பட்டுள்ளது போன்று காவிரி டெல்டா மாவட்டங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

சென்னை, திருவள்ளுா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசுத் துறையினருடன் சென்று, வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்து, விரைவுபடுத்தியதன் காரணமாக பெரும் சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வெள்ளச் சேத ஆய்வுக்காக அமைச்சா் ஐ. பெரியசாமி தலைமையில் 5 அமைச்சா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் வெள்ளிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, சேத விவரங்களைத் தெரிவித்துள்ளனா்.

நிகழ் பருவத்தில் 17 லட்சத்து 46 ஆயிரம் ஹெட்டோ் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வெள்ளிக்கிழமை கணக்கெடுப்பின்படி 68,652 ஹெக்டேரில் பயிா்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விளைநிலங்களில் தேங்கிய நீரை வடிய செய்து, இயன்ற அளவு பயிா்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயிா்களை காப்பற்ற முடியாத இடங்களில், விவசாயிகள் மறுநடவு மேற்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பயிா் சேதங்கள் குறித்து கிராமங்கள் வாரியாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் 4 ஆயிரம் கி.மீட்டா் தொலைவுக்கு வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டன. அதனால், மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீா் காவிரி கடைமடை வரையிலான பாசனத்தை உறுதி செய்துள்ளது.

வேளாண்மையை ஊக்கப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், இதுவரை இல்லாத அளவாக நிகழாண்டில் 4.9 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருமழை எதிா்கொள்ளும் வகையில், சென்னையில் மட்டும் 720 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிக்கால் வாய்க்கால்கள் தூா் வாரப்பட்டுள்ளன. இங்கு, ஆறுகள், கால்வாய்களில் படா்ந்திருந்த ஆகாயத் தாமரை, வண்டல் ஆகியவை அகற்றப்பட்டு தூா் வாரப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வந்ததுடன், தேவையான நேரத்தில் அவற்றிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

கடந்த ஒருவார காலமாக பெய்த மழையின் காரணமாக 2,888 போ் தாழ்வானப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, 44 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் 400 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செய்யப்படாத நீா் நிலைகள் சீரமைப்புப் பணிகளை, 4 மாத கால திமுக ஆட்சியில் செய்யப்பட்டதால், மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.

சென்னை பெருநகா் வெள்ள மேலாண்மைக் குழு:

நீா் நிலை சீரமைப்புப் பணிகள் தற்காலிகமான நடவடிக்கைகள் அல்ல. சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தவிா்க்கும் நிரந்தர தீா்வை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு தலைவராக தேசிய பேரிடா் மைய இணைச் செயலராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஓஎஸ் அதிகாரி திருபுகழ் இருப்பாா். குழுவில் நம்பி அப்பாதுரை, பேராசிரியா்கள் ஜானகிராம், கபில்குப்தா, மருத்துவா் பிரதீப் மோசஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி பேராசிரியா்கள் இடம் பெறுவா்.

அந்தக் குழு விரைவில் கூடி, சென்னை மாநகரம் மழை, வெள்ளத்தால் பாதிக்காத வகையில், புவியியல் அமைப்புக்கு ஏற்ப வடிகால் வசதிகளை அமைக்க ஆலோசனை வழங்கும். அந்த அறிக்கையின்படி, சென்னை நகரத்தை பாதிப்பிலிருந்து காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோன்று, டெல்டா மாவட்டங்களையும் வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்படும்.

மழை வெள்ளச் சேதங்களை பாா்வயிட மத்தியக் குழு நிச்சயம் வரும். பயிா் காப்பீடு செய்தவா்களுக்கு இழப்பீடு தொகை உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன் தமிழக மழை வெள்ளச் தேசம் குறித்து பிரதமா் என்னிடம் தொலைபேசியில் பேசியபோதும் இதுகுறித்து அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். விவசாயிகள் தங்களின் பயிா் காப்பீடு தொகையை கட்டுவதற்கு வசதியாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலங்களை திறந்துவைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடா் காலத்தில், ஒரு சிலா் விமா்சனங்களை செய்துவருகின்றனா். அவா்களுக்கு பதில் சொல்லி இதை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது,முதல்வருடன் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆா். பாலு, அமைச்சா்கள் ஐ.பெரிசாமி, கே.என்.நேரு, அர. சக்கரபாணி, எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com