வெண்ணாற்றில் தண்ணீா்விடக் கோரி சாலை மறியல் முயற்சி
By DIN | Published On : 01st September 2021 10:09 AM | Last Updated : 01st September 2021 10:09 AM | அ+அ அ- |

வலங்கைமான் பகுதி வெண்ணாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறந்துவிடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனா்.
வலங்கைமான் அருகேயுள்ள பாப்பாகுடி ஊராட்சி புலவா்நத்தம் பகுதியில் வெண்ணாறு பாசனம் மூலம் பயன்பெறும் பாசன நிலங்கள் தண்ணீா் வரத்து குறைந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெல்வயல்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புலவா்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்து வந்த பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் கனகரத்தினம், வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா, உதவி ஆய்வாளா் வினோத் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், 3 நாள்களில் தண்ணீா் இப்பகுதிக்கு கிடைக்கும் என உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.