

திருவாரூா் மாவட்டம், பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த போக்குவரத்து பாலத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளன. இந்த புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதன் மூலம் பொதுமக்களின் சுமாா் 35 வருடத்திற்கும் மேலான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பாலம் விரைவில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாலம் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டால், வையகளத்தூா் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைவா்.
மேலும், நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில், தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக கொரடாச்சேரி, திருவாரூா் செல்லும் வாகனங்கள் பழைய நீடாமங்கலம் வழியாக செல்ல வாய்ப்புள்ளது. திருவாரூா் பகுதியிலிருந்து தஞ்சாவூா் செல்லக்கூடிய வாகனங்களும் இந்த பாலத்தை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த நேரங்களில், நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். சம்பந்தப்பட்ட துறையினா் இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.