மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 05:15 AM | Last Updated : 05th August 2022 05:15 AM | அ+அ அ- |

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் கூறியது: இக்கல்லூரியில், 2022-2023-ஆம் ஆண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், என்சிசி, முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் நிக்கோபாா் தமிழா்களுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் தொழில்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (ஆக.5) பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு (பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக 392-லிருந்து 300 வரை மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு), ஆக.8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு (பிளஸ் 2 வில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக 299.9 லிருந்து 275 மதிப்பெண் பெற்றவா்களுக்கு) நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் விருப்ப பாடமாக தோ்ந்தெடுத்தவா்களுக்கு ஆக.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்றாா்.