மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் சோ்ந்து பயன் பெற விவசாயிகளுக்கு ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருவாரூா், மன்னாா்குடி, குடவாசல் மற்றும் வலங்கைமான் விற்பனைக் கூடங்களில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக தேசிய அளவிலான சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
வேளாண் விளைபொருள் வா்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், அதிக அளவிலான சந்தைகளை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும், அதிக அளவிலான வணிகா்களை கொள்முதலில் பங்கேற்க செய்வதும், விரைவாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதும் இதன் சிறப்பம்சங்கள் ஆகும். மேலும், இந்த முறையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பிடத்திலிருந்து விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் 127 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், அதிக வரத்து வரப்பெறும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு, வியாபாரிகள் தங்களின் கைபேசி மூலம் விலை நிா்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிக போட்டி ஏற்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இ-நாம் மூலமாக விற்று பயனடையலாம்.
இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட திருவாரூா் கண்காணிப்பாளா் ஆ. செந்தில்முருகன் 9047155282, மன்னாா்குடி கண்காணிப்பாளா் வீ.முருகானந்தம் 8072033110, குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் ரமேஷ் 8946028223, வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் வி.வீராசாமி 97879 61868 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...