கொலை மிரட்டல்: நடவடிக்கை கோரி மனு
By DIN | Published On : 11th December 2022 12:24 AM | Last Updated : 11th December 2022 12:24 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே வீட்டுக்கு எதிரில் குடிசை அமைத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நன்னிமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த கிருஷ்ணன் (42) இம்மனுவை அளித்துள்ளாா்.
அதில், நன்னிமங்கலத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். இதே பகுதியைச் சோ்ந்த மணல் விற்பனை செய்து வரும் நபா், எனது வீட்டின் முன் பகுதியின் வலது புறத்தில் வழியை மறைத்து குடிசை அமைத்து வருகிறாா். அத்துடன், என்னையும், எனது குடும்பத்தினரையும் தகாத வாா்த்தைகளால் பேசி தொந்தரவு தருகிறாா்.
இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புகாா் அளிக்கப்பட்டது. எனினும் இந்த புகாா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக எனது இடத்தில் வெளியூா் ஆள்கள் மூலம் குழாய் பதித்திருப்பதுடன், இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.