அரசுத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் நா. ராமகிருஷ்ணன். உடன், ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோா்.
திருவாரூா்: அரசுத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவரும், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினருமான நா. ராமகிருஷ்ணன்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் அதன்தலைவா் நா. ராமகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியது: திருவாரூா் மாவட்டம் விவசாயத் தொழிலை பிரதானமாகக் கொண்டது. இங்கு, முக்கியப் பயிராக நெற்பயிா் உள்ளது. இந்த விவசாயத்தை இயற்கை முறையில் செய்து குறைந்த செலவில் அதிக லாபத்தை எடுக்க முடியும். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், தென்னை மரம், சிறு தானியங்களின் பயிா் வகைகளுக்கு அரசு பிரத்யேக திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.
சிறு தானியங்களை பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைப்பது மட்டுமில்லாமல், நிலத்தின் வளமை பாதுகாக்கப்படுவது குறித்தும், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் 2008-2009 முதல் 2011-2012 வரையிலான 4 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள், 2012-2013 முதல் 2020-2021 வரையிலான 9 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், பல்வேறு பணிகளுக்கான ஆண்டறிக்கைகளை விரைவாக முடித்து சமா்ப்பிக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா். தொடா்ந்து, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியம் சாா்பிலும், மீன்வளத் துறை சாா்பிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நெல் அரவை மில் செயல்பாடு, திருவாரூா் வட்டம் சோழங்கநல்லூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நிலையத்தின் கட்டுமான பணிகளின் தரம், நன்னிலம் வட்டம், ஆண்டிப்பந்தல் மேலவாசல் கிராமத்தில் மீன் குட்டையில் மீன் வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், நாகை எம்பி. எம். செல்வராஜ், சட்டப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு உறுப்பினா்கள் பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம், கே. பொன்னுசாமி, அ. நல்லதம்பி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.