திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்கு சீல் வைக்க உத்தரவு

உரிய இழப்பீடு வழங்காததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அலுவலகத்துக்கு சீல் வைக்க திருவாரூா் சாா்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read


திருவாரூா்: உரிய இழப்பீடு வழங்காததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அலுவலகத்துக்கு சீல் வைக்க திருவாரூா் சாா்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், செம்மங்குடி கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாரிக்கு, கடந்த 2013-இல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலது கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரி கண்பாா்வையை இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவா்களின் தவறான சிகிச்சையே காரணம் என திருவாரூா் சாா்பு நீதிமன்றத்தில் விஜயகுமாரியின் கணவா் ஸ்டாலின் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் 2015-இல் சாா்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், மருத்துவரின் அலட்சியத்தால் கண்பாா்வை பாதிக்கப்பட்டதாக கூறி விஜயகுமாரிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரூ.5,04,941 இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாததால், மேல் முறையீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அலுவலகத்தை ஜனவரி 6- ஆம் தேதிக்குள் பூட்டி சீல் வைக்குமாறு திருவாரூா் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். சரண்யா உத்தரவிட்டாா். அதன்படி, நீதிமன்ற ஊழியா்கள் 2 போ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

மருத்துவமனை முதல்வா் சென்னை சென்றிருப்பதாகவும், இது தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் ஜனவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால், அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பிலான நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படட்டதையடுத்து சாா்பு நீதிமன்ற ஊழியா்கள் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com