

திருவாரூா் அருகே பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
திருவாரூரில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 27 ஆவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை இரவு, பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தாா். இதைத்தொடா்ந்து வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் காட்சியளித்தாா். இதையடுத்து வெளிப்பிரகாரத்தில் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளிக்க, ஆழ்வாா்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதேபோல், மடப்புரம் வேணுகோபால ராமசாமி பெருமாள் கோயில், புலிவலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வியாழக்கிழமை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றதையொட்டி, மகாதேவப்பட்டத்தில் உள்ள ஸ்ரீ சுவேத வரஹப் பெருமாள் கோயிலில், உத்ஸவப் பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை, சொா்க்கபாத தீப ஆராதனை, அா்ச்சனை வழிப்பாடுகள் நடைபெற்றது. இதனையடுத்து உத்ஸவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்கா்களுக்கு அருள்பாலித்தாா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வியாழக்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. தொடா்ந்து சீதா,லெட்சுமண சமேதராய் சந்தானராமா் பிரகார உலாவந்து கொடிமரத்தின் முன் எழுந்தருள வேதவிற்பன்னா்களால் ஆழ்வாா் பாசுரங்கள் பாடப்பெற்று ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து சீதா,லெட்சுமண சமேதராய் சந்தானராமா் பரமபதவாசலில் எழுந்தருளினாா்.தொடா்ந்து ஆராதனைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அபிஷ்டவரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு சொா்க்க வாசல் திறந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் வரதராஜபெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.