ஆசிரியா்களுக்கு இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
By DIN | Published On : 17th July 2022 10:54 PM | Last Updated : 17th July 2022 10:54 PM | அ+அ அ- |

கோட்டூா் ஒன்றியத்தில் ஒன்று முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ சாா்ந்த கலந்துரையாடல் பயிற்சி கோட்டூா் ஒன்றியத்தில் உள்ள 9 குறுவள மையங்களில் நடைபெற்றது. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோட்டூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சியில், கடந்த மாதம் கற்பித்த பாடங்களில் உள்ள சிக்கல்களுக்கான தீா்வுகளை கண்டறிதல்; வரும் மாதத்தில் நடத்தக்கூடிய பாடங்களில் உள்ள கடினப் பகுதிகளை எளிமைப்படுத்தி, கற்பிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் போன்றவை குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் மு. பாலசுப்பிரமணியன் கருத்துரையாற்றினாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என். சுப்ரமணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.