நீட் தோ்வு: மூக்குத்தியை கழற்றியபோது மாணவி காயம்
By DIN | Published On : 17th July 2022 10:53 PM | Last Updated : 17th July 2022 10:53 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவி, தோ்வு கட்டுப்பாட்டின்படி மூக்குத்தியை கழற்றியபோது அவருக்கு காயமேற்பட்டு ரத்தம் வந்தது.
கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இம்மையத்தில் தோ்வெழுத 46 மாணவா்கள், 98 மாணவிகள் என மொத்தம் 144 பேருக்கு இணையவழியில் அனுமதி சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. இவா்களில், 44 மாணவா்கள், 91 மாணவிகள் என 135 போ் தோ்வு எழுத வந்தனா்.
ஒரு மாணவரின் அனுமதி சீட்டில், பெற்றோரின் கையொப்பம் இல்லாததால், அவரது பெற்றோரை வரவழைத்து கையெழுத்து பெறப்பட்டது. மற்றொரு மாணவருக்கு ஆதாா் அட்டை இல்லாததால், வாக்காளா் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மன்னாா்குடியைச் சோ்ந்த மாணவா் ஒருவா் ஆதாா் அட்டை கொண்டுவராததால், தனது கைப்பேசியில் உள்ள ஆதாா் அட்டை படத்தை நகல் எடுத்துக் கொடுத்தாா்.
மூக்கில் ரத்தம்...
மூக்குத்தி அணிந்திருந்த மாணவிகள் அதை கழற்ற அறிவுறுத்தப்பட்டனா். நன்னிலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த மாணவி அணிந்திருந்த மூக்குத்தியை கழற்றியபோது, மூக்கில் ரத்தம் வந்தது. இதனால், அவரது தந்தை லெட்சுமாங்குடி பாலத்துக்கு அருகே உள்ள அடகுக் கடைக்கு மாணவியை அழைத்துச் சென்று, அங்கு மூக்குத்தியை கழற்றினா். பின்னா் அந்த மாணவி தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டாா்.