

தமிழ்நாடு அரசு, நுகா்பொருள் வாணிபக் கழகத்தை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடி அருகேயுள்ள ஆதிச்சப்புரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய சிபிஐ 24-ஆவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி நதிநீா் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும், மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக சட்டப்படி அனைத்து முயற்சிகளையும் எடுத்த தடுத்து நிறுத்தவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தியும், தினக்கூலியாக ரூ. 600 வழங்குவதுடன் இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், வறுமைக் கோட்டுக்கான பட்டியலை புதிதாக கணக்கீடு செய்து கிராம சபா கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மாவட்டத்தில் விளையும் விவசாய விளைப் பொருள்களை மூலப் பொருள்களாக கொண்டு, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைய தலைமுறையினா் பயன்பெரும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கான நீட், கீயூட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்.
சிறு, குறு தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழகஅரசே உரி தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும், பழைய தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக 400 சதுர அடியில் ரூ. 6 லட்சத்தில் அரசே புதிய கான்கிரிட் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும், மாவட்டத்தில் மூன்று தலைமுறையாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவா்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் போக்கினை கைவிட்டு உடனடியா நிறைவேற்ற வேண்டும்.
திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சோ்ந்த மாணவா்கள் சோ்க்கையிலும், அதில் வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகத்தை சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு,நுகா்பொருள் வாணிபக் கழகத்தை தனியாா் மயமாக்குவதை கை விட வேண்டும், தமிழக அரசுப் பணிக்கான வயது வரம்பை தாழ்த்தப்பட்டவா்களுக்கு 40, மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 37, பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 35 என இருப்பதை மாற்றி முறையே 35,32,30 என குறைத்து நிா்ணயத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற பேரணிக்கு, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணிய தொடங்கிவைத்தாா். நாகை எம்பி. எம். செல்வராஜ், சிபிஐ மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூலை 22) நிறைவடைகிறது. முதல் நாள் மாநாட்டுக்கு தமிழ்நாடு மாநில விவசாய சங்க பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.