காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதம்
By DIN | Published On : 09th June 2022 12:57 AM | Last Updated : 09th June 2022 12:57 AM | அ+அ அ- |

கா்நாடகம் தொடா்ந்து வலியுறுத்திவரும் மேக்கேதாட்டு அணை குறித்து ஜூன் 17-இல் நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடக அரசு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே, எந்த எதிா்ப்பு வந்தாலும் மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் என்று அறிவித்ததுடன், கட்டுமானத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்தது.
அரசியல் சட்ட வழி முறைகளுக்கு அப்பால் கா்நாடக அரசு அனுமதி பெறாத அணைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டிக்க வேண்டிய மத்திய அரசு கண்டிக்கவில்லை. இந்த நிலையிலும் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் தில்லி சென்று மேக்தேதாட்டு அணைக்கான அனுமதி கேட்டு வலியுறுத்தியுள்ளனா்.
வரும் ஜூன் 17-ஆம் தேதி கூட இருக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கா்நாடக அரசு வலியுறுத்தும் மேக்கேதாட்டு அணைக் கட்டுமானத்தை விவாதப் பொருளாக வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய ஒருமைப்பாட்டை அரசியல் சட்ட வழிமுறைகளைக் காக்க வேண்டிய மத்திய அரசும், ஆணையமும் ஒருதலைபட்சமாக நடப்பது ஏற்கத்தக்கதல்ல.
மேலும் இதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, காவிரி ஆணையம் விவாதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக காவிரி ஆணையம் மேக்கேதாட்டு அணைக்கான பொருளை கூட்ட நடவடிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.