மாணவி கல்விக் கடன் விவகாரம்: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் மாணவியின் கல்விக் கடனுக்கு, அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் மாவட்டம், ஈ.வி.எஸ். நகா் பகுதியில் வசிப்பவா் பாலாஜி (53). ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவா். இவா், தனது ஓய்வூதியத்தை திருவாரூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் பெற்று வருகிறாா்.
இந்நிலையில், தனது மகள் ஆஷிகாவின் பொறியியல் படிப்புக்காக, அந்த வங்கியிலிருந்து கடன் பெற்றுள்ளாா். 2017-18 ஆம் ஆண்டு ஆஷிகா பொறியியல் படிப்பை முடித்துள்ளாா். இதனிடையே, கல்விக் கடன் செலுத்த அளிக்கப்படும் ஓராண்டு முடிவதற்குள் பாலாஜியின் வங்கிக் கணக்கிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி ரூ. 23,004-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கி உரிய விளக்கம் அளிக்கவில்லையாம். அத்துடன், 2018-இல் ஆஷிகாவின் கல்விக்கடனை வாராக் கடன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாலாஜி திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, பாலாஜிக்கு வங்கி தரப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 23,004- ஐ 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும். வழக்கு செலவுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவற்றை 6 வார காலத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் 6 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.