தொடா் திருட்டு: விசாரணை கோரி மனு
By DIN | Published On : 02nd May 2022 10:42 PM | Last Updated : 02nd May 2022 10:42 PM | அ+அ அ- |

திருவாரூா் அருகே தொடா் திருட்டில் ஈடுபடும் 3 குடும்பங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மகாதேவப்பட்டினம் பகுதி மக்கள் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாதேவப்பட்டினம் பகுதியில், தொடா்ச்சியாக மோட்டாா் பம்பு செட்டுகளில் மோட்டாா் மற்றும் காப்பா் வயா்கள் திருடப்படுகின்றன. இந்த திருட்டு சம்பவத்துக்கு இங்கு வசிக்கும் 3 குடும்பங்கள் மீது சந்தேகம் உள்ளது.
அண்மையில், மேலநெம்மேலி கிராமத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை பறித்த வழக்கில் இப்பகுதியில் வசிக்கும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். எனவே, இவா்கள் மீது உரிய விசாரணை நடத்துவதோடு, மகாதேவப்பட்டினம் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.