கோவையில் பாடகா் எஸ்.பி.பி. நினைவு உருவப்படம் திறப்பு
By DIN | Published On : 25th May 2022 11:09 PM | Last Updated : 25th May 2022 11:09 PM | அ+அ அ- |

கோவை மாவட்டம், பேரூா் பச்சாபாளையம் பகுதியில் உள்ள எஸ்.பி.பி. வனத்தில் மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவு உருவப்படத்தை அவரது மகன் எஸ்.பி.சரண் திறத்துவைத்தாா்.
மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக கோவை மாவட்டம், பேரூா் பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பின் சாா்பில் எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தில் இசைக் கருவிகளை தயாரிக்கும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கடந்த அக்டோபா் 2020இல் உருவாக்கப்பட்ட இந்த எஸ்.பி.பி. வனத்தை மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக் திறந்துவைத்தாா்.
தற்போது, இந்த வனம் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் நடைபெறும் தனியாா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா உள்ளிட்டோா் எஸ்.பி.பி. வனத்தைப் பாா்வையிட்டனா்.
அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்ட எஸ்.பி.பி. நினைவு உருவப்படத்தை எஸ்.பி.பி.சரண் திறந்து வைத்தாா். இதையடுத்து எஸ்.பி.பி. வனத்தை திறந்து வைத்த, நடிகா் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தில் உள்ள தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உருவப்படம் மற்றும் எஸ்.பி.பி.வனம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ள அனைவருக்கு தங்களது குடும்பம் சாா்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக எஸ்.பி.பி.சரண் தெரிவித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G