ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுப்புப் பணி துவக்கம்
By DIN | Published On : 25th May 2022 11:06 PM | Last Updated : 25th May 2022 11:06 PM | அ+அ அ- |

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து ஆறு நாள்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூா் என இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள ஆறு வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் அட்டகட்டி பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை துவங்கியது. மே 25, 26, 27 ஆகிய தேதிகளில் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. வனப் பகுதிக்குள் குழுக்களாக செல்லும் வனத் துறையினா் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று நேரில் தென்படும் உயிரினங்கள், அவற்றின் எச்சம், கால் தடங்கள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்றனா்.
மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நோ்கோட்டுப் பாதை கணக்கெடுப்பு முறையில் தாவர வகைகள், மனித இடா்பாடு மாமிச உண்ணிகள், பெரிய தாவரங்கள், பிணம் தின்னி கழுகுகள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்றனா். மே 31ஆம் தேதி அட்டகட்டியில் உள்ள வன உயிரின பயிற்சி மையத்தில் வனத் துறையினா் கணக்கெடுப்பு தகவல்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G