சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஆவடி அருகே உள்ள கோயில் நிலத்தை மீட்க உடனடி நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆவடி அருகே உள்ள கோயில் நிலத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

ஆவடி அருகே உள்ள கோயில் நிலத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை செளகாா்பேட்டை பகுதியில் 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக ஆவடி தாலுகா வெள்ளனுரில் 137 ஏக்கா் அசையா சொத்துக்கள் உள்ளன .இந்த சொத்துக்கள் மூலம் கோயிலுக்கு எந்த வருமானமும் வரவில்லை. கோயில் சொத்துக்கள் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்குமாறு இந்து சமய அறநிலையதுறைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி புகாா் மனு அனுப்பினேன். இந்த மனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு, ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில் கூடுதல் ஆணையா் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில் சம்மந்தப்பட்ட கோயில் சொத்துக்கள் அளவீடு செய்யப்பட்டதாகவும், கோயில் சொத்துக்களில் பல வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூடுதல் ஆணையா் கூறியுள்ளதாக தகவல் வந்தது. இது தெரிந்தவுடன் கோயில் மேலாளருக்கு கடந்த 22-ஆம் தேதி தேதி மனு அளித்தேன்.

ஆனால் இதுவரை கோயில் நிலங்களை மீட்கவோ, பாதுகாக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என அதில் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. சரவணன் ஆகியோா் முன்பு புதன்கிழமை விசாரணை வந்தது. அப்போது அறநிலையத்துறை வழக்குரைஞரிடம், மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலித்தனரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு விளக்கமளித்த அறநிலையத் துறை வழக்குரைஞா் ஏற்கெனவே கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் சா்வே செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் நிா்வாகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கோயிலுக்கு சொந்தமான 137 ஏக்கா் நிலத்தில் பல்வேறு தரப்பினா் ஆக்கிரமித்துள்ளனா். அதில் நீா் நிலைகளும் அடங்கும் என்பதால் அவை நில அளவை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

இதையடுத்து நீதிபதிகள், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com