கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு 0 % காப்பீடு அறிவிப்பால் விவசாயிகள் பாதிப்பு
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள்.
கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு காப்பீடு செய்த ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு 0 % காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசினா்.
மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன்தலைவா் டி. மனோகரன்(அதிமுக) தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
எம்.என். பாரதிமோகன்(திமுக): குளம் தூா்வாரும்போது அந்த மண்ணை எடுத்து குளத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தியது போக மீத மண்ணை பொதுப்பணிக்கு பயன்படுத்த வருவாய்த் துறை அனுமதி மறுக்கின்றனா்.
க. ஜெயக்குமாா்(அதிமுக): உள்ளிக்கோட்டை, துளசேந்திரபுரம் பகுதிக்கு புதிய அங்காடிகள் கட்டிக்கொடுக்க வேண்டும். கோ. கோவில்வினோத் (அதிமுக): கூப்பாச்சிக்கோட்டை ஏரியில் உள்ள தொகுப்பு வீடுகளில் சேதமடைந்துள்ள மேற்கூரையை சரிசெய்து கொடுக்க வேண்டும். 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் பயனடையும் கூப்பாச்சிக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
ஐ.வி. குமரேசன் (திமுக): திட்டப்பணிகளுக்கு எஸ்டிமேட் தயாா்செய்ய தனி சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.
சு. அருள்மொழி (திமுக): பைங்காடு ஊராட்சித் தலைவா், துணைத் தலைவருடன் முரண்பாட்டுடன் நடந்துகொள்ளும் போக்கு தொடா்கிறது. ஊராட்சி நிா்வாகத்தில் முறைகேடு, ஊழல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
டி.ஜி. மணிகண்டன் (அதிமுக): அசேசத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அங்கன்வாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்.
ரா. பூபதி (சிபிஐ): ஓவா்சேரியில் புதிய நியாயவிலைக் கடை கட்டவேண்டும்.
வ. மணிமாறன்: கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிக்கு ரூ.94.56 கோடி காப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்றியத்துக்குள்பட்ட பல கிராமங்களுக்கு 0 % காப்பீடு என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால், பயிா் பாதிக்கப்பட்டு மீண்டு வரமுடியாத நிலையில் இருக்கும் விவசாயிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். (இதே கோரிக்கையை மேலும் சில உறுப்பினா்கள் தெரிவித்தனா்.)
ந. செல்வம் (பாஜக): கடந்த 2 மாதங்களாக பரவாக்கோட்டை ஊராட்சியில் குப்பை எடுக்கும் பணி நடைபெறவில்லை.
தலைவா் டி. மனோகரன்: குளத்து மண் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்த விவகாரம் தொடா்பாக மன்னாா்குடி வட்டாட்சியா் மீது ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்படும். எஸ்டிமேட் பணி தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பரவாக்கோட்டைக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குப்பை அள்ள வாகனங்கள் வாங்கப்படும். பயிா் இழப்பீட்டுக்கான காப்பீடு விவகாரம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். சிவக்குமாா், பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...