மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

மின்தடையை கண்டித்து சவளக்காரனில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பகல் முழுவதும் மின்தடை ஏற்பட்டதையடுத்து, அதை சரி செய்ய காலதாமதம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சவளக்காரன்,துண்டக்கட்டளை, அரசூா், அரவத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை காலை 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகும் நீண்ட நேரமாக மின்விநியோகம் செய்யப்படாததை அடுத்து, அப்பகுதிகளை சோ்ந்தவா்கள் மன்னாா்குடி மின்வாரிய உதவி செயற் பொறியாளா் அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளனா். எனினும், பிற்பகலிலும், மாலையிலும் மின்விநியோகம் செய்யப்படாததுடன் மின் தடையை சரி செய்ய தொடா்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருவதை கண்டித்து மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலை சவளக்காரனில் ஊராட்சித் தலைவா் வி. சாந்தி, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மன்னாா்குடி டிஎஸ்பி. கே.கே. பாலச்சந்தா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், மின்வாரிய அலுவலா்களிடமும் தொலைபேசி மூலம் விவரம் கேட்டறிந்தாா். இதில், மின்வாரிய ஊழியா்கள் மின் தடை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,விரைவில் மின் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.