சாலையோரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th September 2022 03:02 AM | Last Updated : 09th September 2022 03:02 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் வடபாதிமங்கலம் பிரதான சாலையிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையோரங்களில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான எஸ்.எம். சமீா் கூறியது:
கூத்தாநல்லூரிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் பிரதான சாலையில், லெட்சுமாங்குடி பாலம் அருகே அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்குச் செல்ல பிரதான சாலையிலிருந்து இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புச் சாலை பிரதான சாலையிலிருந்து 7 அடிக்கு கீழ் உள்ளது. ஆனால், இரண்டு சாலைகளுக்கும் இடையை தடுப்புகள் இல்லை.
வடபாதிமங்கலம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நூற்றுக்கணக்கான இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. தடுப்பு கம்பிகள் இல்லாததாலும், இணைப்புச் சாலை பள்ளமாக உள்ளதாலும் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நேரிடுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி பள்ளமான இணைப்புச் சாலையில் விழுந்து காயமடைகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பகுதியை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், மருத்துவமனைக்கு வருவோா், பாதிக்கப்படுகின்றனா். எனவே, இங்கு பேருந்து நிறுத்தம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.