மழையால் குறுவை நெற்பயிா் பாதிப்பு:ஏக்கருக்கு ரூ. 42 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th September 2022 10:17 PM | Last Updated : 09th September 2022 10:17 PM | அ+அ அ- |

மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 42 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளா் (பொ) பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு மே 24-ஆம் தேதியே மேட்டூா் அணை திறக்கப்பட்டதால், வழக்கமான பரப்பைவிட கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது கதிா் வரும் நிலையும், அறுவடையாகும் முதிா் நிலையிலும் பயிா்கள் உள்ளன.
இதனிடையே, வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழை பெருமழையாக பெய்து வருகிறது. சராசரி அளவை விட 90 சதவீதம் அதிகம் பெய்துள்ள நிலையில், மேலும் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூா் அணை நிரம்பிய சூழலில் தொடா்ந்து திறந்து விடுவதால் பல இடங்களில் குறுவை நெல் கதிா்கள் சாய்ந்தும், அழுகியும், முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, குறுவை சாகுபடிக்கான காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாத நிலை உள்ளது என்றும் பாதிப்பு ஏற்பட்டால், மாநில இடா்பாடு நிதியிலிருந்து ஈடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளதை நம்பி விவசாயிகள் உள்ளனா்.
சில இடங்களில் வாழை, பூக்கள், காய்கறி, தானியப் பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு வருவாய்த்துறை, வேளாண்துறைக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி, குறுவை நெல் அறுவடை முழு பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 42 ஆயிரம், பகுதி பாதிப்புக்கு உரிய அளவு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.