திருவாரூா் அருகே சுந்தரவிளாகத்தில் உள்ள செல்வ மகாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்காக விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி மற்றும் நவகிரக ஹோமம், கோ பூஜை ஆகியவற்றுடன் யாக சாலை பூஜைகள் செப்டம்பா் 4-ஆம் தேதி தொடங்கின. அடுத்தடுத்த நாள்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம்கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை நான்காம்கால யாகசாலை பூஜைக்குப் பின்னா், பூா்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு மகாஅபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.