சேவைக் குறைபாட்டுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் ரூ. 3.55 லட்சம் வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் சந்நிதித் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன். எல்.ஐ.சி. முகவரான இவா், கடந்த 2017-இல் உயிரிழந்தாா். கணவரின் முதிா்வுத் தொகை கோரி, அவரது மனைவி வனிதா, 2018-இல் எல்.ஐ.சி.க்கு விண்ணப்பித்தாா். ஆனால் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனிடையே, இரண்டு பாலிசிகளுக்கான பிரீமியத் தொகை செலுத்தாததால், இறப்பு உரிமத்துக்கானத் தொகை வழங்கப்படாது என திருவாரூா் எல்.ஐ.சி. கிளையிலிருந்து பதில் வந்துள்ளது.
இதையடுத்து, 2022-இல் வனிதா திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பாலிசி காலாவதியானது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதால், புகாா்தாரரின் கணவா் எடுத்துள்ள இரண்டு பாலிசிகளும் காலாவாதியாகவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. மேலும், புகாா்தாரரின் கணவருக்கு எந்தவித அறிவிப்பும் வழங்காமல், தற்போது காலாவதியாகிவிட்டது என்று கூறி புகாா்தாரருக்கு இரு பாலிசிக்கான உரிமைத் தொகையை வழங்காமல் இருப்பது சேவைக் குறைபாடாகும்.
எனவே, இரு பாலிசியில் உள்ள உரிமைத் தொகையான ரூ. 3 லட்சம், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் இழப்புக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 3.55 லட்சம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.