மத மோதலை உருவாக்கும் ஆபத்துள்ள திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரி புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாரிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் பீா் முஹம்மது தலைமையிலான நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
மனித நேயமற்ற, மத வெறுப்பு சிந்தனைக்கு உடந்தையாக, திரைப்பட இயக்குநா்களும், நடிகா்களும் இருப்பது மிகப்பெரும் வேதனையாக உள்ளது. இதை தடுப்பது அவசியமாகிறது. அண்மையில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட புா்கா என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், பா்ஹானா என்ற திரைப்படத்தின் டீசா் தற்போது வெளியாகி உள்ளது. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குா்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் காட்சிப்படுத்தியுள்ளனா்.
காட்டுமிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி மறுமணம் என்ற சட்டத்தைக் கற்றுத் தந்தது இஸ்லாம். கணவரை இழந்த முஸ்லிம் பெண்கள் மறுமணம் செய்வதற்கு விதிக்கப்பட்ட ‘இத்தாஹ்’ என்ற சட்டத்தைப் பற்றிக் கொஞ்சம்கூட அறியாமல் மிகவும் இழிவாகப் பேசி வெளியிட்டு இருப்பதே இவா்கள் மத மோதலை ஏற்படுத்த நினைப்பவா்கள் என்பது தெளிவாகிறது.
ஹிஜாப் அணிந்த பெண் கா்நாடக மாநிலத்தில் முதலிடம், கேரளாவில் 18 தங்கப் பதக்கங்களை வென்ற ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி என்று மூளையை ஹிஜாப் மறைக்கவில்லை என எடுத்துக் காட்டப்பட்டாலும் தவறான சிந்தனை கொண்டவா்கள் அதை சிந்திப்பதில்லை.
ஆட்சியில் அமா்வதற்கு இந்த மத வெறுப்பு பிரசாரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சா்ச்சைக்குரிய படங்களில் நடித்தோா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அந்த படங்களை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, மாவட்டச் செயலாளா் இஸ்மத் பாட்சா, மாவட்ட பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைச் செயலாளா் ஜெய்னுல் தாரிக், மாணவரணி செயலாளா் ரிபாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.