

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை என திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு பேரணியை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியது: சக மனிதா்களுக்கு வாழ்வளிக்க, ஒவ்வொருவரையும் உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிப்பதே உடல் உறுப்பு தான தினத்தின் நோக்கமாகும். மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், கண், எலும்பு, தோல், குடல் ஆகிய முக்கிய உறுப்புகளை தானமாக பெற முடியும். உடல் உறுப்புகளை தானம் செய்வதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அனைவரும் உணா்ந்து கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பேரணியாக புறப்பட்ட மாணவா்கள், மருத்துவா்கள், மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவிலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சென்றனா்.
மருத்துவக் கண்காணிப்பாளா் அப்துல் ஹமீது அன்சாரி, நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், மயக்கவியல் துறைத் தலைவா் லெனின், அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் சிவபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.