கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் வழங்கல்

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் வழங்கல்

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, பொதுமக்களுக்கு சீரணி சோறு என்ற பிரசாதம் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் வாழ்ந்த முகம்மது நபிகள் நாயகத்தின் சீடர்களில் முக்கியமானவரான முஹய்யதீன் அப்துல் காதர் அவதரித்த மாதத்தை முன்னிட்டு, இந்த விழா நடைபெறுகிறது. 

பெரியப் பள்ளி வாயில் தராவீஹ் மஹாலில் சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி தொடங்கியது. மதரஸா பைஜுல் பாக்கியாத் தலைமை பேராசிரியர் டி.எம். ஜாஹிர் ஹுசைன் தலைமை வகித்தார். பெரியப் பள்ளி இமாம் ஏ.எல்.முஹம்மது அலி துஆ செய்தார் அரபிக் கல்லூரி முஹம்மது யூசுப் கிராஅத் ஓதினார். பாடகர் எம்.ஏ.முஜிபுர் ரஹ்மான் கீதம் வாசித்தார். பெரியப் பள்ளிவாசல் உதவி தலைவர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் வரவேற்றார். 

விழாவில், நபிகள் நாயகம் குறித்த வரலாற்றுப் போதனைகளை, சின்னப் பள்ளி வாயில் இமாம் ஏ.கே.எம்.ஷர்புதீன் சிறப்புரையாற்றினார். நிர்வாகக் குழு உறுப்பினர் என்.ஏ.அன்சார்தீன் பாபு நன்றி கூறினார். தொடர்ந்து, நள்ளிரவு 1.15 மணியளவில், பெரியப் பள்ளி வாசல் முன்பு, பெரியத் தெரு வரையிலும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 68 அடுப்புகளில், 68 சட்டிகள் வைக்கப்பட்டது. 

1088 மரக்கால் அரிசி, அதாவது 3500 கிலோ அரிசியுடன், பூண்டு, இஞ்சி, வெங்காயம், ஏலக்காய், நெய், தயிர், நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சீரணி பிரசாதம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை தொழுகைக்குப் பிறகு, கூத்தாநல்லூர் நகரில் 24 வார்டுகளிலும், வசிக்கும் சாதி, மத பேதமின்றி  அனைவருக்கும் வீடு, வீடாகச் சென்று சீரணிச் சோறு வழங்கப்பட்டன. 

இதற்கான ஏற்பாடுகளை, பெரியப் பள்ளி வாசல் தலைவர் அப்துல் சலீம், பொதுச் செயலாளர் அல்பானி அக்பர் அலி மற்றும் நிர்வாகிகள், இளைஞர்கள் கவனித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com