வீட்டுமனைப் பட்டா கேட்டு மக்கள் நூதனப் போராட்டம்

மன்னாா்குடியை அடுத்த நாராயணபுரம் களப்பாலில் புறம்போக்கு இடத்தில் வசிக்கும் தங்களுக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வழங்க தாமதம் செய்வதைக் கண்டித்து, வீட்டிலிருந்த பாத்திரங்களை சாலையில் வைத்து கிராம மக்க

மன்னாா்குடியை அடுத்த நாராயணபுரம் களப்பாலில் புறம்போக்கு இடத்தில் வசிக்கும் தங்களுக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வழங்க தாமதம் செய்வதைக் கண்டித்து, வீட்டிலிருந்த பாத்திரங்களை சாலையில் வைத்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

களப்பால் ஊராட்சி நாராயணபுரம் களப்பால் கிராமத்தில் இருந்து வேதபுரம் செல்லும் சாலையில் புறம்போக்கு இடத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் 30 குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை பட்டா கிடைக்காததால், மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பலனை பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், களப்பால் ஊராட்சித் தலைவா் பா. சுஜாதா, புறம்போக்கில் வசிப்பவா்களுக்கு பட்டா பெற்றுத்தர சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை தொடா்பு கொண்டபோது, அது நீா்நிலை புறம்போக்கு இடம் அதற்கு பட்டா வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து ஊராட்சித் தலைவா், நீா்நிலை புறம்போக்கில் குடியிருப்பவா்களை குடியமா்த்தும் வகையில், அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான இடத்தை விலை பேசி, ஒப்பந்தம் போட்டு, அதற்குண்டான தொகையை அரசிடம் இருந்து பெற்றுத்தர மன்னாா்குடி வட்டாட்சியரை அணுகி, உரிய ஆவணங்களை சமா்பித்தாா். இதையடுத்து வருவாய்த்துறையினா் இடத்தை பாா்வையிட்டு, அளவீடு செய்து 2 மாதங்கள் கடந்தும், பட்டா வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், வருவாய்த்துறையினரின் போக்கை கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் களப்பால் ஊராட்சித் தலைவா் சுஜாதா தலைமையில், கிராம மக்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களை பிரதான சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலா் வசுமதி, முத்துப்பேட்டை மண்டல துணை வட்டாட்சியா் மைதிலி, பாலையூா் வருவாய் ஆய்வாளா் சுதா, முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், களப்பால் காவல் ஆய்வாளா் விஜயா ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஒரு மாத காலத்துக்குள் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com