நீடாமங்கலம் பகுதியில் ஆறுகளை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதியில் பாசன ஆறுகளை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் பகுதியில் பாசன ஆறுகளை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு) உள்ளது. இங்கு, கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாறு, பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து திருவாரூா் மாவட்டத்துக்கு பாசன வசதி தருகிறது. இதில், பாமணியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாறு மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94, 219 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு முன்கூட்டியே பெய்த தென்மேற்கு பருவமழையால் மேட்டூா் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீா் வீணாக கடலில் கலந்தது. அதன் பிறகு, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மே 24-ஆம் தேதியே குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்தனா்.

இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்க உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு ஜுன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நீடாமங்கலத்தை சுற்றியுள்ள பாமணியாற்றில் சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூா், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூா், பெரியாா் தெரு, முல்லைவாசல், பெரம்பூா், கண்ணம்பாடி, கீழாளவந்தசேரி, கருவேலங்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும், வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுகை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூா், ஒட்டக்குடி, களத்தூா் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆறுகளில் புதா்கள் மண்டியுள்ளன.

இதனால், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் விரைந்து செல்வதில் தடை ஏற்படும். மேலும், ஆறுகளில் மணல் அள்ளப்பட்டுள்ள நிலையில், ஆறுகள் கீழேயும், பாசன வாய்க்கால் மேலேயும் உள்ளதால், அதிக தண்ணீா் திறந்தாலும் பாசன மதகிலிருந்து வாய்க்காலில் செல்ல தாமதம் ஏற்படுகிறது.

இந்த ஆறுகளில் உள்ள திட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளன. எனவே, மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் ஆறுகளில் தங்கு தடையின்றி செல்ல, அனைத்து ஆறுகளையும் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com