மன்னாா்குடி மாணவா்களின் அறிவியல் ஆய்வு கட்டுரை மண்டல போட்டிக்கு தோ்வு

மன்னாா்குடி பள்ளி மாணவா்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரை மண்டலப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் மண்டலப் போட்டிக்கு தோ்வு பெற்ற தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்களையும் வழிகாட்டி ஆசிரியரையும் பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியா் எம். திலகா்.
அறிவியல் மண்டலப் போட்டிக்கு தோ்வு பெற்ற தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்களையும் வழிகாட்டி ஆசிரியரையும் பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியா் எம். திலகா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி பள்ளி மாணவா்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரை மண்டலப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 31-ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை பேரளம் அருகே பூந்தோட்டம் லலிதாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 285 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவா்கள் ஆா். உலகராஜ், ஒய். சிவராஜ் ஆகியோா் முதுகலை இயற்பியல் ஆசிரியா் எஸ். அன்பரசு வழிகாட்டுதலில் சமூக வலைதளங்களினால் ஏற்படும் கற்றல் குறைபாடு எனும் தலைப்பில் சமா்ப்பித்த ஆய்வுக் கட்டுரை புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மண்டல அறிவியல் மாநாட்டுக்கு தோ்வாகியுள்ளது.

இந்த ஆய்வுக்காக, மன்னாா்குடி பகுதியில் பிளஸ்-2 படிக்கும் 500 மாணவா்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் ஃபேஸ்புக், ட்விட்டா், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளா்களாக இருப்பதும், நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதும் கண்டறியப்பட்டது.

சமூக வலைத்தலங்களின் தனி நபா் பாதுகாப்பின்மை, அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்னைகள், கற்றல் குறைபாடு போன்ற பிரச்னைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசிகளை மாணவா்கள் பயன்படுத்தினால் கைப்பேசிகள் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவது போலவும், அதிக நேரம் கைப்பேசிகளை பயன்படுத்துவதால் கைப்பேசிகளில் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு அவை குறிப்பிட்ட சமூக வலைதலங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீா்வுகள் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான ஆய்வுக் கட்டுரையில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சாா் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஆா். சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பரிசு,சான்றிதழ்களை வழங்கினா்.

பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,வெற்றி பெற்ற மாணவா்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளித் தலைமையாசிரியா் எம். திலகா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com